நாட்டின் மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யம் கர்நாடகா முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம்: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: நாட்டில் மிக பெரிய ஊழல் சாம்ராஜ்ய அரசாங்கத்தை ஆளும் பாஜ அரசு கொடுத்து வருகிறது என்று ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் பாதயாத்திரை நடத்தினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் நடந்து வருவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. ஆபரேஷன் தாமரை என்ற ஜனநாயக படுகொலை திட்டத்தின் மூலம் காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, அவர்கள் தயவில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சி.

மாநிலத்தில் எந்த வளர்ச்சி திட்டம் செயல்படுத்தினாலும் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. அதை நான் சொல்லவில்லை. கர்நாடக மாநில அரசு ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம் போவதாக நான் சொல்லவில்லை. பாஜவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஒருவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இயங்கிவரும் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உரிமங்களை புதுப்பிக்க 40 சதவீதம் கமிஷன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமனம் செய்ய ரூ.80 லட்சம் ஊழல், பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நியமனத்தில் ஊழல் என ஊழல் பட்டியல் இமயமலைபோல் உயர்ந்துள்ளது. நாட்டில் மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யம் செய்யும் மாநிலங்களில் பட்டியலில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார். 

Related Stories: