அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி; அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி அவசர டெல்லி பயணம்

 

 

* தொகுதிகளை விட்டுக் கொடுக்காததால் கடும் கோபம்
* மிரட்டி பணிய வைக்க திட்டம்

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், கடும் அதிருப்தி அடைந்த அமித்ஷா, உடனடியாக டெல்லிவரும்படி உத்தரவிட்டுள்ளதால், சென்னையில் இருந்து இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து, இன்று சென்னைக்கு வரவிருந்த தமிழக பாஜ மேலிட பார்வையாளர் பியூஷ்கோயல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே தொகுதிகளை பிரித்து கொள்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து எடப்பாடி பலமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகும் இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

குறிப்பாக, அதிமுகவுக்கு சாதகமான வேளச்சேரி, தி.நகர் உள்பட தமிழகத்தில் 55 தொகுதிகளை பாஜ கேட்பதாகவும், அவற்றை பிரித்து தருவதில் அதிமுகவுக்கு தயக்கம் இருப்பதால், இருதரப்பினருக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல்கள் நிலவுவதால் நாட்கள் கடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டால்தான், மற்ற கூட்டணி கட்சிகளாக பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி கொடுக்கும் நிலையில் எடப்பாடி உள்ளார். இதைத் தொடர்ந்து, தொகுதிகளை பிரித்து கொள்வதில் உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக, டெல்லியில் இருந்து இன்று தமிழ்நாட்டின் பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னைக்கு வரத் திட்டமிட்டு இருந்தார்.

எனினும், தொகுதி பங்கீடு குறித்து பியூஸ் கோயல் வந்து பேசினாலும், அதிமுக தரப்பில் வரும் தேர்தலில் பாஜவுக்கு 25 தொகுதிகள்தான் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. சமீபத்தில் பிரதமர் மோடி திருச்சி வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியை, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்குவரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதத்தைப் பார்த்த பியூஸ்கோயல், இனிமேல் அவருடன் பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். நீங்களே பேசுங்கள் என்று அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டார். இன்று சென்னைக்கு வரும் திட்டத்தையும் அவர் ரத்து செய்து விட்டார்.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக டெல்லிக்கு வரும்படி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவசரமாக அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணியளவில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றார். இன்று மதியம் 1.30 மணியளவில் டெல்லி போய் சேர்ந்த எடப்பாடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, அதிமுக மற்றும் பாஜவுக்கு இடையே தொகுதி பங்கீடுகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக பாஜவுக்கு 55 இடங்கள் வேண்டும், அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தான் தர வேண்டும் என்று அமித்ஷா எடப்பாடிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்த தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குவதற்கு எடப்பாடி தயக்கம் காட்டி வருகிறார். ஆனாலும், இன்று நடைபெற்ற சந்திப்பில் அதிமுக – பாஜக தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று அல்லது நாளை கட்சி மேலிடம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து இன்றிரவு அல்லது நாளை காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலமாக சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் ஒருநாள் அவசர டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கட்சியை அடகுவைக்கும் எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கூட்டணி கட்சிகளை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து பேசுவார். பின்னர் கட்சி அலுவலகத்திலேயே இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது வாடிக்கையாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனார். எடப்பாடி முதல்வராகவும் இருந்தார். அப்போது நடந்த தேர்தலின்போது பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

அப்போதே அதிமுக முன்னணி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சி தலைமை அலுவலகத்தில் பேசாமல், நட்சத்திர ஓட்டலில் பேசுவதா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால், தற்ேபாது எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கிறது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு எடப்பாடிதான் தலைமை என்று கூறப்பட்டாலும், எடப்பாடியை அமித்ஷா தான் இயக்கி வருகிறார். கூட்டணி குறித்து பேச ஒவ்வொரு முறையும் எடப்பாடி தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார்.

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அனைத்து தலைவர்களும் அவர்களை தேடி சென்னை வந்த நிலை மாறி, தற்போது எடப்பாடி மற்ற தலைவர்களை தேடி டெல்லி சென்று காத்துக்கிடப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடகுவைத்துவிட்டதாக வெளிப்படையாக அவரது கட்சி தலைவர்கள், தொண்டர்களே பேசும்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: