தர்மபுரியை சேர்ந்தவர் உள்பட கேரளாவில் 2 பெண்கள் நரபலி: ஆபாச படத்தில் நடித்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறி அழைத்து வந்து கொலை; போலி மந்திரவாதி, தம்பதி வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தர்மபுரியை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலி மந்திரவாதி, கணவன், மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரியை சேர்ந்தவர் பத்மா (52). சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி லாட்டரி   விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். 2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இருவரும் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த தம்பதி பகவல் சிங், லைலா. பகவல் சிங் இலந்தூரில் நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். பேஸ்புக் மூலம் பகவல் சிங்குடன் அதே பகுதியை சேர்ந்த ஷாபிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. போலி மந்திரவாதியான ஷாபியும், மந்திரவாதத்தில் ஈடுபாடு கொண்ட பகவல் சிங்கும்  குறுகிய காலத்திலேயே நெருக்கமானார்கள். பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் சேரும் என்று ஷாபி கூறியுள்ளார். அதற்கு பகவல் சிங்கும், லைலாவும் சம்மதித்தனர். 4 மாதங்களுக்கு முன் காலடி பகுதியில் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும் ரோஸ்லியை (50) ஷாபி தொடர்பு கொண்டுள்ளார்.

கணவனை விவாகரத்து செய்த ரோஸ்லி, காலடி பகுதியில் மற்றொருவருடன் வசித்து வந்தார். ரோஸ்லியின் மகள் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். ரோஸ்லியை அணுகிய ஷாபி, தனக்குத் தெரிந்த ஒருவர் ஆபாசப் படம்  எடுப்பதாகவும், அதில் நடித்தால் 10 லட்சம் பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளார். அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார். பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர்.

பின்னர், பகவல் சிங் சுத்தியால் ரோஸ்லி தலையில் அடித்து கொன்றார். பகவல் சிங்கும், லைலாவும் ரோஸ்லி உடலை துண்டு துண்டாக வெட்டி, ரத்தத்தை அறை முழுவதும் தெளித்து விடிய விடிய பூஜை நடத்தினர். ரோஸ்லியின் பிறப்புறுப்பில் கூட கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கிழித்துள்ளனர். உடல் பாகங்கள் மீது உப்பை தூவி வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். புதைத்த இடத்தில் மஞ்சள் செடிகளை நட்டுள்ளனர். ஆனால், நரபலி கொடுத்து பல மாதங்களாகியும் பகவல் சிங்கின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இது குறித்து ஷாபியிடம் கேட்டபோது, ஏதோ சாபம் இருப்பதாகவும் இன்னொரு பெண்ணை நரபலி கொடுத்தால் மாற்றம் தென்படும் என்றும் கூறியுள்ளார். அடுத்த பெண்ணையும் தானே கொண்டு வருவதாக கூறிய ஷாபி,  பத்மாவை  அணுகி ரோஸ்லியிடம் கூறியது போலவே பண ஆசை காட்டியுள்ளார். பத்மாவை பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்றதும், கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டி புதைத்து விட்டனர். இதற்கிடையே, ரோஸ்லி காணாமல் போன விவரம் அவரது மகள் மஞ்சுவுக்கு தெரியவந்தது.

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த மஞ்சு, காலடி போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசாரால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான், பத்மா காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 பெண்கள் காணாமல் போனதாக புகார் வரவே, போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தினர். அதில்தான், நரபலி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பகவல் சிங்கின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட 2 பேரின் உடல்களை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர். உடல்கள் வெட்டப்பட்டதால் குடும்பத்தினரால் அடையாளம் காண முடியவில்லை. எனவே, டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

* மார்பகங்களை அறுத்து பூஜை

கொச்சி நகர கமிஷனர் நாகராஜூ கூறுகையில், ‘2 பெண்களையும் மிக கொடூரமாக துன்புறுத்தி நரபலி கொடுத்துள்ளனர். பெண்களின் மார்பகங்களை அறுத்தும் பிறப்புறுப்பில் குத்தியும் ரத்தத்தை எடுத்து பூஜை செய்துள்ளனர்,’ என்றார்.

* முதல்வர் அதிர்ச்சி

கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நாகரீக உலகில் இப்போதும் அரக்க மனதுடன் சிலர் உள்ளனர் என்பதையே இந்த செயல் காட்டுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: