ஜனாதிபதி முர்மு குறித்து சர்ச்சை பேச்சு; காங். மூத்த நிர்வாகி மீது முட்டை வீச்சு.! தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ரூர்கேலா: ஜனாதிபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகி உதித் ராஜ் மீது பாஜகவினர் முட்டைகளை வீசினர். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உதித் ராஜூக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் உதித் ராஜ் வெளியிட்ட பதிவில், ‘ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து நான் கூறியது, என்னுடைய தனிப்பட்ட கருத்து; இவ்விசயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை’ என்று கூறியதுடன் மேலும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளையும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அவரது காரை மறித்து பாஜகவினர் கறுப்பு கொடி காட்டினர். அந்த கூட்டத்தில் இருந்த சிலர், உதித் ராஜ் மீது முட்டைகளை வீசியதோடு, அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில், போலீசாருக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக உதித் ராஜின் கருத்து உள்ளது’ என்றார். இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம், ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளிக்கும்படி உதித் ராஜுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: