அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி : அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தி வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்ற அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷா தலைமையிலான 30 பேர் கொண்ட ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலை குழு 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது தொகுப்பை கடந்த மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியுள்ளது.

அதில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட இதர கல்வி நிறுவனங்களில் இந்தி வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இந்தி பேசாத மாநிலங்களில் அம்மொழியை திணிக்க மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு இதுவே சான்று என கூறியுள்ளார். அமித்ஷா குழுவின் பரிந்துரைகளை இந்தி பேசாதா மாநில மக்கள் எந்த தயக்கமுமின்றி நிராகரிப்பார்கள் என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி பேசாத மாநிலங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையான மோதல் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ப.சிதம்பரம் தமது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.    

Related Stories: