திருமலைக்கு வந்து சிரமப்படுவதை தடுக்க பக்தர்களுக்கு அறை ஒதுக்குவது விரைவில் திருப்பதிக்கு மாற்றம்: தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருமலைக்கு வந்து பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்க்க, அறை ஒதுக்கும் முறை விரைவில் திருப்பதிக்கு மாற்றப்பட உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று, ‘டயல் யுவர் இஓ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருப்பதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி பேசியதாவது: திருமலையில் தேவஸ்தானம் சார்பில் 7 ஆயிரம் அறைகள் மட்டுமே உள்ளது. ஆனால், தரிசனத்திற்காக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். ஆனால், 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் தங்க வைப்பதற்கான வசதி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி இல்லாததால், மேற்கொண்டு புதிதாக கட்டிடம் கட்ட இயலாது.

எனவே, பக்தர்கள் திருமலையில் தங்குவதற்காக முயற்சி மேற்கொள்வதை தவிர்த்து திருப்பதியில் அறைகள் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக  திருமலை வந்த பிறகு  அறை  கிடைக்காத பக்தர்கள் சிரமப்படுவதை தவீர்க்க விரைவில் திருப்பதியிலேயே அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் அறைகள் பெற்ற பக்தர்கள் நேரடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு செல்லலாம். குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் பெருமாள் கோயில் கட்டுவதற்காக குஜராத் அரசு 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. விரைவில் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

*ஒரே மாதத்தில் கொட்டியரூ.122.19 கோடி காணிக்கை ஏழுமலையான்  கோயிலில் செப்டம்பரில்  21.12 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து, உண்டியலில்  ரூ.122.19 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 98.74 லட்சம் லட்டுகள்  பக்தர்களுக்கு  விற்கப்பட்டுள்ளது. 44.71 லட்சம் பக்தர்களுக்கு   அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 9.02 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து  தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

Related Stories: