தமிழகத்தில் உற்பத்தியாகும் குறு நிறுவனங்களின் உதிரிபாகங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி; அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

மீனம்பாக்கம்: செக். குடியரசு நாட்டில் நடைபெற்ற தொழில் நிறுவன கண்காட்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், நேற்று விமானம் மூலமாக சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உதிரிபாகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்தார். செக். குடியரசு நாட்டில் நடைபெற்ற உலகளாவிய தொழில் நிறுவன கண்காட்சியில், அரசு முறை பயணமாக தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து நேற்று துபாய் வழியாக விமானம் மூலமாக சென்னை திரும்பினார்.

இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: செக் குடியரசு நாட்டில் கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலகளாவிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கண்காட்சி நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் நான், துறை செயலாளர், தொழில் முனைவோர் உள்பட 38 பேர் பங்கேற்றோம். அந்நாட்டு பொருளாதார துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து, இங்கு தொழில் தொடங்க அனைத்து சலுகைகளும் வழங்க தமிழக முதல்வர் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.

அந்நாட்டின் சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் கிளஸ்டரை தமிழகத்தில் துவங்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக செக்.குடியரசு நாட்டு அமைச்சர் உறுதியளித்தார். தமிழகத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலமாக அதிகளவு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. செக். குடியரசு நாட்டில் அதிகளவு உதிரிபாகங்கள் தேவைப்படுவதால், அந்நாடு உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதன்மூலம் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கும். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

Related Stories: