வைகை அணை நீர்மட்டம் சரிந்ததால் 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: விவசாயிகள் ஏமாற்றம்

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் சரிந்த நிலையில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மதகுகள் மூடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் நிரம்பிய வைகை அணையில் இருந்து ஒருமாதத்திற்கும் மேலாக ஆற்றில் உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில் 58ம் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடந்த 2 மாதங்களாக கோரிக்கை விடுத்தனர். ஏனெனில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 67அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்பதால் வைகை அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவாக இருக்கும் போதே தண்ணீர் திறக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தண்ணீரை ஆற்றில் உபரியாக திறக்கும் போதெல்லாம் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்காமல் மிகவும் தாமதமாக கடந்த மாதம் 28ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து பாசனக்கால்வாய் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரியத் தொடங்கியது.

நேற்றுக்காலை வைகை அணை நீர்மட்டம் 67.49 அடியாக சரிந்த நிலையில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 58ம் கால்வாய் மூடப்பட்டது. வெறும் 11 நாட்கள் மட்டுமே மிகவும் குறைந்த அளவில் திறக்கப்பட்ட தண்ணீர் உசிலம்பட்டி பகுதிக்கு போய் சேரும் முன்பாகவே அணையின் மதகுகள் மூடப்பட்டதால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் 58ம் கால்வாயில் நிரந்தமாக தண்ணீர் திறக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: