திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய செயல் அதிகாரி ஷமல்ராவ் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக ஜெ.ஷமல்ராவ் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பின்னர் நிருபர்களிடையே கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் பக்தர்களுக்கும் சுவாமிக்கும் சேவை செய்யக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய இந்து கோயிலாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் அதனை சார்ந்த துணைக்கோயில்கள் அனைத்திலும் நிர்வாக ரீதியாக ஒழுங்குமுறைப்படுத்தி பக்தர்கள் சுலபமாக சுவாமி தரிசனம் செய்வது மற்றும் வசதிகளை செய்து தருவது என வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் செயல்படுத்தப்படும். பணிக்கான ஒப்பந்தம், கொள்முதல் செய்யப்படுவது அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்.

சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம், அறைகள், அன்னப்பிரசாதம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை சிறந்த முறையில் வழங்குவதோடு பக்தர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத ஆன்மிகப் பயணத்தின் அனுபவமாக இருக்கும் விதமாக மாற்றி அமைக்கப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிதி, சுவாமிக்கு பக்தர்கள் மூலம் வந்தது. இதில் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் இதற்கு முன்பு எவ்வாறு இருந்தது, தற்போது எப்படி உள்ளது, வருங்காலத்தில் எவ்வாறு மாற்றி அமைப்பது போன்றவை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்படும். முறைகேடு இருந்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

24 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (சனி), நேற்று (ஞாயிறு) வாரவிடுமுறை மற்றும் இன்று அரசுவிடுமுறை தினம் என்பதால் கடந்த 2 நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்தது. இந்நிலையில் நேற்று 69,870 பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 42,119 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹4 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள கெங்கம்மா கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: