ஈகுவடார் சிறையில் பயங்கர கலவரம்; போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 16 கைதிகள் பலி: 43 பேர் படுகாயம்

குய்ட்டோ: ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர் உள்பட 16 பேர் பரிதாபமாக இறந்தனர். 43 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைகளில் அசாதாரண சூழல் நீடித்து வருகிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் ஈகுவடாரின் லடாகுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே நேற்று முன்தினம் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. சிறிது நேரத்தில் கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். தகவலறிந்து கலவர தடுப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கைதிகளை விரட்டியடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் இந்த கலவரத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர் உள்பட 16 கைதிகள் பலியாகினர். 43க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: