தமிழக அரசின் மேம்பாட்டு திட்டம் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் நவீனமுறையில் செயல்படும் தீக்காய சிகிச்சை பிரிவு

* 35 படுக்கைகளுடன் தனி ஐசியு வார்டு

* தோல் வங்கி உள்ளிட்ட பல்துறை சிகிச்சை

மதுரை: தமிழக அரசின் மேம்பாட்டு திட்டம் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தோல் வங்கி உள்ளிட்ட பலதரப்பட்ட துறையினரின் சிகிச்சை வசதிகளுடன் 35 படுக்கைகள் கொண்ட தனி ஐசியு வார்டு செயல்பட்டு வருகிறது என டீன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மேம்பாட்டு திட்டங்கள் மூலம், மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவு நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் தீக்காய பிரிவுக்கு ஒரு வார்டு மட்டுமே இருந்தது. தற்போது தீக்காய பிரிவுக்கு தனி பிளாக் கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது. வார்டு எண் 160ல் உள்ள புதிய தீக்காய சிகிச்சை பிரிவில் ஒரு ஐசியு வார்டு, ஜெனரல் வார்டு, தீக்காய சிகிச்சைக்கு என தனியாக ஆபரேஷன் தியேட்டர் என நவீன வசதிகள் உள்ளன. ஐசியு வார்டில் 15 படுக்கைள், ஜெனரல் வார்டில் 20 படுக்கைகள் என மொத்தம் 35 படுக்கை வசதிகள் உள்ளன.

நவீன தோல் வங்கி

அவசர தீக்காய சிகிச்சை பிரிவில் தோல் வங்கி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் மட்டுமின்றி, இறந்தவர்களிடம் இருந்தும் தோல் தானம் பெறப்படுகிறது. முறையான பதத்திற்கு பின் 5 வருடம் வரை வங்கியில் தோல் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. தீக்காயத்தின் சதவீதத்தை பொறுத்து, இந்த புதிய தோல் மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது. பெரும்பாலும் 20 முதல் 30 சதவீத தீக்காயத்திற்கு பொருத்தப்படுவது இல்லை. 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் உள்ளவர்களுக்கு புதிய தோல் பொருத்தப்படுகிறது.

அவரவர் உடல் தோல் தன்மையை பொறுத்து பொருத்தப்படும். புதிய தோல் ஒட்டிக் கொள்ளும். சில சமயம் பொருத்தப்பட்ட தோல் ஒட்டாத நிலையில் அதற்கு பதிலாக அந்த நோயாளிகளின் தோல், சில வாரங்களில் புதிதாக வளர்ச்சி கண்டு விடும். தோல் வங்கி ஆரம்பித்து கடந்த 6 மாதத்தில் 15 பேரிடமிருந்து தானமாக தோல் பெறப்பட்டு, 20 நோயாளிகளுக்கு புதிதாக தோல் பொருத்தப்பட்டு உள்ளது.

24 நேரமும் நோயாளிகள் கண்காணிப்பு

தீக்காய சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் கீழ் செயல்படுகிறது. தீக்காயத்தின் தன்மையை பொறுத்தும், கண், தொண்டை ஆகிய உறுப்புகளின் அருகே ஏற்படும் தீக்காயத்திற்கு அந்தந்த துறை மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் என மருத்துவக்குழு ஒருங்கிணைந்து சிகிச்சை வழங்குகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் 1970ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி துறை துவங்கப்பட்டது. தமிழக அரசின் முயற்சியாக தற்போது நவீன வசதிகள் கொண்ட துறையாக இது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் ஒரு துறை தலைவர், 2 இணைப் பேராசிரியர்கள், 5 துணை பேராசிரியர்கள் உள்ளனர். தற்போது மாணவர் சேர்க்கையும் அதிகமாக உள்ளது. இதனால், பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தீக்காய சிகிச்சை அவசர பிரிவில், 4 பிரிவு சுழற்சி அடிப்படையில் 12 பேர் குழு 24 மணி நேரமும் ஒரு துணை பேராசிரியர் தலைமையில் இயங்கும். இதனால், தீக்காய அவசர சிகிச்சை மற்றும் விபத்து காய தழும்பு சிகிச்சைக்கான நோயாளிகள் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டு, தீவிர உயரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வசதி அரசு மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.

சராசரியாக ஒரு மாதத்திற்கு தீக்காய அவசர சிகிச்சைக்கு 45க்கும் மேற்பட்ட நோயாளிகளும், விபத்து காய தழும்பு சிகிச்சைக்கு 20க்கும் மேற்பட்ட நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து நோயாளிகளுக்கு மதுரையில் உயரிய சிகிச்சை வழங்கப்பட்டு, அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். இது குறித்து டீன் ரத்தினவேல் கூறுகையில், ‘தமிழக அரசின் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு நவீனமயமாகி வருகிறது. தீக்காயம்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்’ என்றார்.

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது கவனம் தேவை

டீன் ரத்தினவேல் கூறுகையில், ‘‘தீபாவளி தினத்தில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருக்க வேண்டும். கவனமுடன் பட்டாசுகளை கையாள வேண்டும். தூரமாய் பட்டாசுகளை வைத்து வெடிக்க வேண்டும். நோயாளிகள், முதியோர் உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஒலி குறைந்த பட்டாசுகளை வெடிக்க வேண்டும். வெடித்த பட்டாசுகளை தண்ணீரில் நனைத்து விட வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும்போது தகுந்த காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும். சில சமயம் தீக்காயம் ஏற்பட்டால், குளிர்ந்த நீரை காயத்தில் ஊற்றி, தகுந்த மருந்தை தடவ வேண்டும்.

காயம் பெரிதாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

தீக்காய பிரிவில் போதிய வார்டு வசதிகள், நவீன சிகிச்சைகள் உள்ளதால் தீபாவளி பட்டாசு விபத்திற்கு என தனி பிரிவு ஒதுக்க வேண்டியதில்லை. தீ விபத்திலிருந்து தப்பும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம்’’ என்றார்.

Related Stories: