சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.2.94 கோடி நகைகள் பறிமுதல்: கோவை விமானநிலையத்தில் 2 பேர் கைது

பீளமேடு: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில பயணிகள் தங்க நகைகள் கடத்தி வருவதாக கோவை மத்திய வருவாய்  புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் கோவையில் தரையிறங்கியதும் அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். இதில் 5 பயணிகள் தங்கள் உடமைகளில் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர்களில் 2 பயணிகள் தங்க சங்கிலி மற்றும் வளையல்களை சூட்கேஸ், பேண்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து 5.6 கிலோ எடை உள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.94 கோடி. பிடிபட்ட முகம்மது அப்சல் (32) என்ற பயணியிடம் ரூ.1 கோடிக்கும் அதிகமான தங்க  நகைகள் இருந்ததால் அவரை ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்ற பயணி ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான தங்க நகைகளை கடத்தி வந்ததால் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் 3 பேர் கொண்டு வந்த நகைகள் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருந்ததால் அவர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு  அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: