சிதம்பரத்தில் கடந்த ஆண்டு 10 குழந்தை திருமண புகார் தீட்சிதர்கள் அடுத்தடுத்து கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமண விவகாரத்தில் தீட்சிதர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று குழந்தை திருமணம் செய்வது. தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தற்போது அடுத்தடுத்து ஆதாரத்துடன் வெளிவரும் நிலையில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த  2021ம் ஆண்டு நடைபெற்ற திருமணம் தொடர்பாக கடந்த வாரம் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் வெளிவந்து இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2021 ஜனவரி மாதம் சிதம்பரத்தில் ஒரு தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது தீட்சிதருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக தற்போது சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணம் செய்த பத்ரிசன் தீட்சிதர் மற்றும் அவரது தந்தை நாகரத்தினம், மணமகனின் அண்ணன் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர, தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இதில் மணமகனின் அண்ணன் சூர்யா மற்றும் சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய இருவரையும் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் பத்ரிசன் தீட்சிதர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களின் குழந்தை திருமண விவகாரம் அடுத்தடுத்து வெளியில் வந்து தீட்சிதர்கள் கைது செய்யப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் கைது நடவடிக்கைகள் தொடரும் என தெரிய வருகிறது. இதனால் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: