அரசு வேலை வாங்கி தருவதாக 23 பேரிடம் ரூ.1.83 கோடி மோசடி: சென்னையில் பதுங்கிய போலி அதிகாரி கைது

பெரம்பலூர்: பெரம்பலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக 23 பேரிடம் ரூ. 1.83 கோடி மோசடி செய்த போலி அதிகாரி சென்னையில் பதுங்கினார். அவரை பாதிக்கப்பட்ட வாலிபர் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்துள்ளார். போலீசார் சென்று அவரை மீட்டு கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவருடன், பெரம்பலூர் ரோஸ்நகரை சேர்ந்த மோகன்பாபுவிற்கு (25) அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக வேலை பார்த்து வருவதாகவும், ஐஏஎஸ் அதிகாரிகள் சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் தனக்கு நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூலம் உங்களுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையும், உங்களது மனைவி சாருமதிக்கு(22) விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மோகன்பாபு, உறவினர் மற்றும் நண்பர்களாகிய கடலூர் மாவட்டம் ஆனந்தகுடி சுதர்சன், அரியலூர் மாவட்டம் செந்துறை கலையரசி, பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் ராஜலிங்கம், உளுந்தூர்பேட்டை பார்த்திபன், நாமக்கல் கலைவாணி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மதன் உட்பட 23 பேரிடம் மொத்தம் ரூ.1கோடியே 83 லட்சத்தை வசூல் செய்து பிரகாஷிடம் கடந்த 2020 மே11ம் தேதி கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தராமல் பிரகாஷ் தலைமறைவாகி சென்னையில் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக மோன்பாபு, பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிபு போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் பணம் கொடுத்த நபர்கள், மோகன்பாபு விடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதையடுத்து மோகன்பாபு, அவரது மனைவி ஆகியோர் கடந்த 29ம்தேதி சென்னை சென்றனர். கோயம்பேட்டில் இருந்த பிரகாஷை, காரில் பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். பணத்தை தந்து விட்டு சென்னை செல்லும்படி அவரை தனது வீட்டில் மோகன்பாபு அடைத்து வைத்து இருந்தார். இதையறிந்த பிரகாஷின் அண்ணன் பால்செல்வன், அவரது மனைவி ஆரோக்கியமேரி ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை 100க்கு போன் செய்து பிரகாஷை, மோகன்பாபு கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்துள்ளார் என தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் மோகன்பாபுவின் வீட்டிற்கு சென்று பிரகாஷ், மோகன்பாபு ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதுதொடர்பாக பிரகாஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரகாஷ் ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக பணிபுரியவில்லை என்பதும், அவர் கூறிய இருவர் ஐஏஎஸ் அதிகாரிகளே கிடையாது என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய காவல்நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும், சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: