இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியா சாம்பியன்

ராஜ்கோட்: ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணியுடன் நடந்த இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹனுமா விஹாரி தலைமையிலான இதர இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 98 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இதர இந்தியா 374 ரன் குவித்தது. சர்பராஸ் 138, ஹனுமா 82, சவுரவ் குமார் 55, ஜெயந்த் யாதவ் 37 ரன் விளாசினர். சவுராஷ்டிரா தரப்பில் சேத்தன் சகாரியா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 276 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா கடுமையாகப் போராடி 380 ரன் குவித்தது. ஜாக்சன் 71, வாசவதா 55, பிரேரக் 72, கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 89 ரன் எடுத்தனர். இதர இந்தியா பந்துவீச்சில் குல்தீப் சென் 5, சவுரவ் குமார் 3, முகேஷ், ஜெயந்த் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 105 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இதர இந்தியா, 31.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை வசப்படுத்தியது. பிரியங்க் 2, யஷ் துல் 8 ரன் எடுத்து உனத்கட் வேகத்தில் வெளியேறினர். அபிமன்யு ஈஸ்வரன் 63 ரன், ஸ்ரீகர் பரத் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முகேஷ் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: