கார்கேவுடன் கருத்து வேறுபாடு இல்லை பாஜவை எதிர்கொள்ள புதிய காங்கிரஸ் தேவை: ஐதராபாத்தில் சசிதரூர் பேட்டி

ஐதராபாத்: ‘‘பாஜவை எதிர்கொள்ள மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய காங்கிரஸ் தேவை. அதற்காகவே கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என ஐதராபாத்தில் சசிதரூர் கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இருவரும் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் பேட்டி அளித்த கார்கே, ‘‘தேர்தலில் ஒருமித்த வேட்பாளர் இருந்தால் நன்றாக இருக்கும் என சசிதரூரிடம் கூறினேன். ஆனால் போட்டியிடுவேன் என உறுதியாக இருக்கும் போது அவரை நான் தடுக்க முடியாது. இருந்தாலும் அவர் எனது இளைய சகோதரர். இது எங்கள் குடும்ப விவகாரம். நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்’’ என்றார்.

இந்நிலையில், நேற்று ஐதராபாத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்த சசிதரூர், ‘‘கார்கேவுடன் எனக்கு சித்தாந்த ரீதியாக எந்த வேறுபாடும் கிடையாது. பாஜவை எதிர்க்க வேண்டுமென அவர் கூறிய விஷயத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால், பாஜவை எதிர்கொள்ள மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய காங்கிரஸ் தேவை. அதற்காகவே நான் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தல் எங்கள் குடும்பத்தில் நடக்கும் விவாதம். சண்டை அல்ல. இதில் யார் வென்றாலும் அது காங்கிரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்’’ என்றார்.

*பிரசாரம் செய்ய நிர்வாகிகளுக்கு தடை

இந்நிலையில், தலைவர் தேர்தலுக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. அதில்,போட்டியிடும் வேட்பாளர்களில் விருப்பப்பட்ட யாரையும் தேர்ந்தெடுக்க  உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது. குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள் அவர்கள் முதலில் கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சி பொது செயலாளர்கள்,செயலாளர்கள், இணை செயலாளர்கள், மாநில தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், செய்தி தொடர்பாளர்கள்   வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: