உவரி அருகே போதையில் தினமும் டார்ச்சர் உணவில் விஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி

திசையன்விளை: நெல்லை மாவட்டம், உவரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன்விளையை சேர்ந்தவர் சிங்காரவேலன்(41). இவரது மனைவி ஜெயக்கொடி(40). இவர்களுக்கு 3 குழந்தைகள். மினி பஸ் டிரைவராக இருந்த சிங்காரவேலன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஜெயக்கொடி ஓலை முனைவதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். மதுப்பழக்கம் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மட்டுமின்றி ஊர்மக்களிடமும் சிங்காரவேலன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 24ம் தேதி திசையன்விளை பஜாரில் வைத்திருந்த பிரதமர் மோடி டிஜிட்டல் பேனரை, சிங்காரவேலன் போதையில் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிங்காரவேலன் வழக்கம்போல் காலை உணவு சாப்பிட்டவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவரின் உடலை பிரீசரில் வைப்பதற்கான ஏற்பாடுகளை ஜெயக்கொடி செய்தார். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிங்காரவேலன் போதையில் தினமும் தகராறில் ஈடுபட்டு துன்புறுத்தி வந்ததால் உணவில் விஷம் வைத்து மனைவி ஜெயக்கொடி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்கொடியை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: