வாலாஜா, தண்டராம்பட்டு அருகே துணிகரம் 5 வீடுகளில் 29 சவரன், ₹8 லட்சம் திருட்டு

*23 சவரன் நகை தப்பியது; மர்ம ஆசாமிகளுக்கு வலை

தண்டராம்பட்டு : வாலாஜா அடுத்தடுத்து 2 வீடுகள், தண்டராம்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டு உடைத்து 29 சவரன் நகைகள், ₹8 லட்சம் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கட்டிலுக்கு அடியில் மரப்பெட்டியில் வைத்திருந்த 23 சவரன் நகைகள் தப்பியது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த  பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(55). இவரது மனைவி அம்சா.  சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தண்டபாணி  குடும்பத்தினர் வீட்டை உட்புறமாக பூட்டிக்கொண்டு மாடியில் உள்ள  அறையில் தூங்கினர். நேற்று காலை கீழே இறங்கி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், பீரோ இருந்த அறையில் சென்று  பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தது. எல்இடி டிவியை காணவில்லை. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பீரோவில் நகைகள் எதுவும் வைக்காததால், கட்டிலுக்கு அடியில் மரப்பெட்டியில் வைத்திருந்த சுமார் 23 சவரன் நகைகள் தப்பியது.

அதேபோல், பக்கத்து வீட்டை சேர்ந்த சக்கரபாணி, அவரது மனைவி தங்கம் ஆகியோர் விவசாய நிலத்திற்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை  உடைத்து உள்ளே புகுந்துள்ள மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 300 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள  கருணாகரன் என்பவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு, ஒரு சவரன் நகை மற்றும் வெள்ளி கொலுசுவை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் தனித்தனியாக தானிப்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, எஸ்ஐ மணிமாறன் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு போன வீடுகளில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ரபிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவீரன்(54), எல்ஐசியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 1ம் தேதி தனது உறவினர்‌ வீட்டில் நடந்த விசேஷத்திற்காக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று ஜெயவீரனின் வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டு, பூட்டு உடைத்து கதவும் திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், போனில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெயவீரன் வந்து பார்த்தபோது, அறையிலிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 சவரன் நகை மற்றும் தனது மகள் திருமணத்திற்காக வங்கியில் கடனாக வாங்கி வைத்திருந்த ₹5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல் ஜெயவீரனின் வீட்டின் அருகில் வசிக்கும் ஷாஜிதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். மீண்டும் நேற்று ஊர் திரும்பினர். அவர் வீட்டிலும்‌ பூட்டு உடைக்கப்பட்டு இருந்து அங்கிருந்த 17 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிய சம்பவம் வாலாஜா, தண்டராம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: