9 விக்கெட் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது பாக்.

சில்ஹட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், மலேசியாவுடன் மோதிய பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வங்கதேசத்தின் சில்ஹட் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. பாக். வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய மலேசியா அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 57 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எல்சா ஹன்ட்டர் ஆட்டமிழக்காமல் 29 ரன், நூர் டானியா 4* ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (5 பேர் டக் அவுட்).

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 9 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து எளிதாக வென்றது. சிட்ரா அமீன் 31 ரன் எடுத்து வெளியேறினார். முனீபா அலி 21, கேப்டன் பிஸ்மா மாரூப் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது. இலங்கை வெற்றி: மற்றொரு ரவுண்டு ராபின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணியை எதிர்கொண்ட இலங்கை டி/எல் விதிப்படி 11 ரன்னில் வெற்றியை வசப்படுத்தியது.

டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்தது. ஹர்ஷிதா 37, நிலாக்‌ஷி 19, அனுஷ்கா 17* ரன் எடுத்தனர். மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால், யுஏஇ அணி 11 ஓவரில் 66 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 11 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 54 ரன் மட்டுமே எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Related Stories: