சில்லி பாய்ன்ட்…

* பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப்(32) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இவர் 2022ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் பங்கேற்க கைக்குழுந்தையுடன் சென்றது அப்போது தலைப்பு செய்தியானது. சில நாட்களுக்கு முன் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் அவர் கடைசியாக விளையாடியது.
* நடப்புத் தொடரில் 10 அணிகளும் 200 ரன்கள் விளாசியுள்ளன. இதுவரை 22 முறை 200 அல்லது அதற்குமேல் ரன்களை குவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐதராபாத் 287/3, 277?3 அதிகபட்சமாக குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணியாக திகழ்கிறது. மொத்தத்தில் ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தலா 4 முறையும், , சென்னை 3முறையும், மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத், லக்னோ, பஞ்சாப் தலா ஒரு முறையும் 200 ரன் விளாசி இருக்கின்றன.
* இதுவரை 40 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன நிலையில் 9சதங்கள் விளாசப்பட்டன. அவற்றில் ஜோஸ் பட்லர்(ராஜஸ்தான்) 2சதங்களும், விராத் கோஹ்லி(பெங்களூர்), சுனில் நரைன்(கொல்கத்தா), ரோகித் சர்மா(மும்பை), டிராவிஸ் ஹெட்(ஐதராபாத்), ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான்), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(லக்னோ), ருதுராஜ்(சென்னை) ஆகியோர் தலா ஒரு சதமும் விளாசியுள்ளனர்
* மும்பை வீரர் ஜஸ் பிரீத் பும்ரா(8ஆட்டங்கள்), பெங்களூர் வீரர் யாஷ் தாகூர்(7 ஆட்டங்கள்). ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா(3 ஆட்டங்கள்) ஆகியோர் மட்டுமே தலா ஒரு முறை 5 விக்கெட் அள்ளி உள்ளனர்.
* கிளாஸன்(ஐதராபாத்), ரியான் , சஞ்சு (ராஜஸ்தான்), துபே(சென்னை), டி காக்(லக்னோ), ரிஷப்(டெல்லி) ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக 3 அரைசதங்கள் விளாசி இருக்கின்றனர். இவர்களை தவிர 13வீரர்கள் தலா 2 அரை சதங்களும், 24 வீரர்கள் தலா ஒரு அரைசதம் அடித்துள்ளனர்.
* டெல்லி வீரர் ஜாக் ஃபிரசெர்(டெல்லி) 15பந்துகளிலும் அரைசதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். கூடவே ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் தான் விளாசிய 3 அரைசதங்களையும் 16, 18, 20 பந்துகளில் வெளுத்துள்ளார். இவர்களை தவிர அபிஷேக் சர்மா(ஐதராபாத்) 16பந்துகளிலும், சூரியகுமார்(மும்பை) 17 பந்துகளிலும் தலா ஒரு அரை சதம், அதிவேகத்தில் அடித்து உள்ளனர்.
* இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள கலீல் அகமது(டெல்லி) 2 மெய்டன் ஓவர்களும் , 5 ஆட்டங்களில் ஆடியுள்ள நடராஜன், 7 ஆட்டங்களில் ஆடியுள்ள புவனேஸ்வர் குமார்(ஐதராபாத்), 7 ஆட்டங்களில் ஆடியுள்ள யாஷ் தாகூர்(லக்னோ) ஆகியோர் தலா ஒரு மெய்டன் ஓவரும் வீசியுள்ளனர்.
* ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி 6-3, 6-2 என நேர் செட்களில் குரோஷியா வீராங்கனை டோனா வேகிக்கை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனை தட்ஜனா மரியாவை சாய்த்தார்.
* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 10வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று அரையிறுதி ஆட்டங்களில் லீக் சாம்பியன் மோகன் பகானை 1-2 என்ற என்ற கோல் கணக்கில் ஒடிஷாவும், 2வது ஆட்டத்தில் கோவாவை 3-2 என்ற கோல் கணக்கில மும்பையும் வென்றுள்ளன. அரையிறுதியின் 2வது சுற்று ஆட்டங்கள் ஏப்.28, 29 தேதிகளில் நடைபெறும்.
* ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு ஆட்டமும், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு ஆட்டத்தில் நன்றாக விளையாடியதும் அந்த வீரரை உலக கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வரிசையில் எல்லாவற்றுக்கும் ‘நான்’ என கருத்துச் சொல்லும் சஞ்ஜெய் மஞ்சரேக்கர், ‘ரிஷப் பன்ட் கட்டாயம் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும்’ என்று வலியிறுத்த ஆரம்பித்து விட்டார்.
* காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் முன்னாள் நெம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்(37, ஸ்பெயின்) சொந்தநாட்டில் நடைபெறும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நேற்று நடைபெற இருந்த முதல் சுற்றில் அவர் களமிறங்கவில்லை. இந்நிலையில் நடால், ‘இப்போது உடல்நிலை இருக்கும் நிலையில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடந்தால் கூட என்னால் கலந்துக் கொள்ள முடியாது. ஆனால் அந்தப்போட்டி அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் என்னால் பங்கேற்க முடியும் என்று நினைக்கிறேன். இடையில் வேறு போட்டிகளில் பங்கேற்கும் சூழல் இல்லை’ என்று கூறியுள்ளார். நடால் வென்ற 22 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களில் 14பட்டங்கள் பிரெஞ்ச் ஓபனில் பெற்றவை.
* எதிர்பார்த்ததை போலவே சென்னை அணியின் தோல்விகளுக்கு புதுக் கேப்டன் ருதுராஜ்தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதனால் ஜடேஜாவை பாதித் தொடரிலேயே கேப்டன் பதவியில் இருந்து தூக்கிய சம்பவம் மீண்டும் நடைபெறும் என்கிறார்கள். ஆனால் உண்மையில் ருதுராஜ், டிஆர்எஸ் கேட்க வேண்டும் என்றால் கூட டோனியை தான் பார்க்கிறார். அவர் தலையசைப்புக்கு காத்திருக்கிறார். டோனிதான் எல்லா முடிவுகளையும் எடுப்பது ஒளிபரப்பிலேயே தெளிவாக தெரிகிறது. ஆனால் அணி வெற்றிப் பெற்றால் டோனியை கொண்டாடுவதும், தோற்றால் ருதுராஜை வசைப்பாடுவதும் தொடர்கிறது. அதனால் கேப்டன் மாற்றம் நிச்சயம் என்கிறார்கள்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Related Stories: