முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 40வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இப்போட்டியில், நடப்பு தொடரில் இரு அணிகளும் 2வது முறையாக பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஏற்கனவே அகமதாபாத்தில் மோதிய ஆட்டத்தில், டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இருக்கிறது. அதே சமயம், மொத்த வெற்றியில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லியை விட கில் தலைமையிலான குஜராத் கூடுதலாக ஒரு வெற்றியை வசப்படுத்தி உள்ளது.

டெல்லி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை, குஜராத், லக்னோ அணிகளை பதம் பார்த்தது. பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் அணிகளிடம் தோல்வியை தழுவியது. கேப்டன் ரிஷப், பிரித்வி ஷா, வார்னர், மெக்குருக், ஸ்டப்ஸ், ஹோப் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். இஷாந்த், குல்தீப், கலீல், அக்சர் பந்துவீச்சில் கை கொடுக்கின்றனர்.

எனினும், ஒருங்கிணைந்து விளையாடத் தவறுவதால் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியுமா என டெல்லி பரிதவிக்கிறது. குஜராத் 8 லீக் ஆட்டங்களில் மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை வென்றுள்ள நிலையில், சென்னை, பஞ்சாப், லக்னோ, டெல்லி அணிகளிடம் வீழ்ச்சியை சந்தித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற குஜராத் அணிக்கும் தொடர் வெற்றிகள் தேவை.

சாஹா, சாய் சுதர்சுன், கில், மில்லர், விஜய் ஷங்கர், உமேஷ், ரஷித் கான், மோகித், நல்கண்டே என குஜராத் அணியில் தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனாலும், சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு எதிராக மோசமாக தோற்றது. அதற்கு பதிலடி தர குஜராத்தும், மீண்டும் வெற்றிக்காக டெல்லியும் மல்லுக்கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* இரு அணிகளும் மோதிய 4 ஆட்டங்களில் 2-2 என சமநிலை வகிக்கின்றன.

* அதிகபட்சமாக குஜராத் 171 ரன், டெல்லி 162 ரன் விளாசி உள்ளன. குறைந்தபட்சமாக டெல்லி 92, குஜராத் 89 ரன்னில் சுருண்டுள்ளன.

The post முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: