வழி தவறியதால் திரும்ப முடியாமல் காட்டுக்குள் விடிய விடிய தவித்த பெண்கள், சிறுவர்கள் 7 பேர் மீட்பு; சஞ்சீவராய பெருமாள் கோயிலுக்கு வந்தபோது சோகம்

சேந்தமங்கலம்: எருமப்பட்டி அருகேயுள்ள சஞ்சீவராய பெருமாள் கோயிலுக்கு சென்றபோது வழித்தவறி காட்டுப்பகுதிக்குள் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த, 7 பேரை போலீசார் மீட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த தலைமலை சஞ்சீவராய பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவ திருவிழா நடந்து வருகிறது. இதனிடையே புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருச்சி மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த உதயகுமார்(65), சுகன்யா(35), வனிதா(35), சுவேதா(18), வாசுகி(25), மவுளீஸ்வரன்(10), பிரகதீஸ்வரன்(8) ஆகிய 7பேரும், எருமப்பட்டி சஞ்சீவராய பெருமாள் கோயிலுக்கு நேற்று முன்தினம் காலை காரில் வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், காரை அடிவாரம் பகுதியில் நிறுத்திவிட்டு பின்னர் கரடு முரடான மலைப்பாதையில் ஏறி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு பின்னர் மாலை கீழே இறங்கினர்.   கோயிலுக்கு மலைப்பாதை வழியாக வந்து செல்ல இரண்டு வழிகள் உள்ளது.

இதனிடையே உதயகுமார் மற்றும் குடும்பத்தினர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாதையில் இறங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வழிதெரியாமல், அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் தவறி சென்றனர். இதனிடையே அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டில் இருந்த நம்பரில் தொடர்பு கொண்டு தாசில்தார் ஜானகிக்கு முதலில் தகவல் தெரிவித்தனர். அவர் சேவா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் எருமப்பட்டி போலீசார் காட்டுப்பகுதிக்குள் விரைந்து சென்றனர். அங்கு நேற்று முன்தினம் இரவு முழுவதும் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை. செல்போன் டவரும் சரியாக கிடைக்காததால், அவர்களை தொடர்பு கொண்டு பேசவும் முடியவில்லை. தொடர்ந்து விடிய விடிய தேடிய நிலையில், நேற்று அதிகாலை 4.10 மணியளவில் 7 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே 7 பேரில் ஒருவருக்கு பூச்சி கடித்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: