தாய்லாந்து புக்கட் தீவில் 2 ஆண்டுகளுக்குப்பின் சைவத்திருவிழா!: முகங்களை மறைக்கும்படி பெரிய வாள், கத்திகளை குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

புக்கட்: தாய்லாந்தின் புக்கட் தீவில் அமைந்துள்ள சீன கோயிலில் 9 நாட்கள் நீடிக்கும் சைவத் திருவிழாவில் காண்போரை திடுக்கிட செய்யும் வகையில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தாய்லாந்தை பாலங்கள் மூலம் இணைக்கக்கூடிய இயற்கை எழிலார்ந்த புக்கட் தீவில் சீனர்களின் புனித தலமான சாம்கோம் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஒரு வாரம் நீடிக்கும் சைவத்திருவிழா நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று வெகுவிமர்சியாக தொடங்கியது.

இதையடுத்து திருவிழாவிற்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், சீன கடவுள்களின் உருவங்களை தாங்கியபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது முகங்களை மறைக்கும் அளவிற்கு தாடைகளில் பெரிய வாள், கத்திகளை அலகுகளாக குத்தி வீதிகளில் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். கூரிய ஆயுதங்களை அலகு குத்துவது சைவத்திருவிழா அல்லாத காலத்தில் இழைக்கும் பாவங்களின் அடையாளமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். காண்போரை திடுக்கிட செய்யும்படி பெரிய பெரிய கத்தி, வாள்களை அலகுகளாக தாடையை நிறைத்தவாறு குத்தி ஊர்வலம் சென்ற பக்தர்கள் இது கடவுள்களுக்கு தாங்கள் செய்யும் மரியாதை, நேர்த்திக்கடன் என்று தெரிவிக்கின்றனர்.

சைவத்திருவிழா என்று அழைக்கப்படும் இந்த வருடாந்திர விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அச்சம்கொள்ளா வகையில் வைக்கும் மிக கடினமான நேர்த்திக்கடன்களை அனாயசயமாக செய்கின்றனர். தகைக்கும் தீ கொழும்புகளில் நடப்பது, உடல் பாகங்களில் கூரிய ஆயுதங்களால் அலகுகளை குத்தி நடப்பது, இரண்டிற்கும் மேற்பட்ட வாள் போன்ற பெரிய கத்திகளை தாடைகளில் குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர். இதன் மூலம் பாவங்கள் தொலையும் என்றும் தீயசக்திகள் நெருங்காது என்றும் அத்துடன் செழிப்பான ஆண்டு வரவேற்பதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, அக்டோபர் 4ம் தேதி நிறைவடைகிறது.

Related Stories: