ஒலிம்பிக் துவங்குவதற்கு முன் 3 தீ வைப்பு சம்பவங்கள் பிரான்சில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

பாரிஸ்: பாரிசில் ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக தண்டவாளங்களுக்கு அருகே தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் அதிவேக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டி தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குவிந்துள்ளனர். எனவே பாதுகாப்பு பணிகளுக்காக பிரான்ஸ் போலீஸ் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் அதிவேக ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு தாக்குதலில் சில ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் சிக்னல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த தீ வைப்பு சம்பவங்களால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாரிஸ் நகரை இணைக்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டன. பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் பாட்ரீஸ் வெர்கிரியேட்,‘‘ அட்லாண்டிக், நார்ட், எஸ்ட் ஆகிய ரயில் நிலையங்களின் அருகே தீ வைப்பு சம்பவங்கள் நிகந்துள்ளன. தண்டவாளத்தின் அருகே தீ எரிந்ததும் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

இதை பார்க்கும் போது கிரிமினல் குற்றவாளிகளின் செயலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஒலிம்பிக் தொடக்க விழாவையும், வார இறுதி நாட்களையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நிலைமையை விரைவில் மீட்டெடுக்க மீட்பு குழுவினர் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார். அரசு அதிகாரிகள் கூறுகையில்,‘‘தீ வைப்பு சம்பவங்களுக்கும் ஒலிம்பிக்கிற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணைநடக்கிறது’’ என்றனர்.

* இது நாசவேலை: பிரதமர் எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பிரான்சின் அதிவேக ரயில் வலையமைப்பின் முக்கிய பகுதிகளைத் தாக்கியது நாசவேலையாகும். இதில் ஒரு தெளிவான நோக்கம் உள்ளது. அதில் பிரான்சின் அதிவேக ரயில் வலையமைப்பைத் தடுப்பது ஆகும் என்று பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறினார்.

The post ஒலிம்பிக் துவங்குவதற்கு முன் 3 தீ வைப்பு சம்பவங்கள் பிரான்சில் ரயில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: