வரதட்சணை கேட்டு மிரட்டல் வீட்டு வாசலில் இளம்பெண் தர்ணா

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் வீரட்டானந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜூபேர் அகமது (31), ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ஷர்மிளா பேகம் (25). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்றாவதாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்நிலையில் பிரசவத்திற்காக சென்ற ஷர்மிளா பேகம் அம்மா வீட்டிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஷர்மிளா பேகத்திடம் மாமனார் முகமது பஷீர், மாமியார் பானு ஆகியோர் அடிக்கடி வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஏன் வரதட்சணையை கொண்டு வரவில்லை. திருமணத்தின் போது தருகிறேன் என கூறிய நகைகளை ஏன் வாங்கி வரவில்லை என்று மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றினர். இதனால் மனமுடைந்த ஷர்மிளாபேகம் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஷர்மிளா பேகத்தின் மாமியார், மாமனார் முகமது பஷீர், பானு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கணவரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் ஷர்மிளாபேகத்தை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: