செங்கோட்டையில் குடும்ப தகராறில் பயங்கரம் மருமகள் கழுத்தை நெரித்து கொன்ற மாமனார் கைது

செங்கோட்டை : செங்கோட்டையில் குடும்ப தகராறில் மருமகள் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை லாலா குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த இசக்கிராஜ் (34). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (29). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று இசக்கிராஜ் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மட்டுமே வீட்டில் இருந்தார் அப்போது வீட்டிற்கு வந்த இசக்கிராஜின் தந்தை முருகேசனுக்கும், மருமகள் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன், பார்வதியின் கழுத்தை கயிற்றால் இறுக்கியதில் அவர் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்து ேபான முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி முருகேசனை கைது செய்தனர்.

Related Stories: