லேசாக வண்டியை இடித்ததற்கு வாலிபரிடம் ரூ.6000, செல்போன் ஏடிஎம் கார்டை பறித்த ஆசாமி: போலீசார் விசாரணை

பெரம்பூர்: பெரம்பூர் ஹைதர் கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் அப்ரோஸ் (40). பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கே.எம்.கார்டன் போலீஸ் பூத் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் வண்டி மீது இடித்து விட்டார். உடனே அந்த நபர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்ரோஸ் பணம் இல்லை என கூறவே அவர் அப்ரோசை தாக்கி ரூ.6000, செல்போன், ஏடிஎம் கார்டு மற்றும் அப்ரோசின் இருசக்கர வாகனத்தை பூட்டி அதன் சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

இதனால் செய்வதறியாது  நின்றிருந்த அப்ரோஸ் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் கொடுத்த தகவலின் பெயரில் புளியந்தோப்பு பி.கே.காலனி 10வது பிளாக் பகுதியைச் சேர்ந்த ராகுல் டிராவிட் (19) என்ற நபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். லேசாக வண்டியை இடித்ததற்கு ரூ. 6000 பணம், செல்போன், ஏடிஎம் கார்டு என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு சென்ற வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: