நெல்லை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு; 100 ஆண்டு பழமையான கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது: ஆய்வுக் கூட்டத்திற்கு 200 பெண்கள் சென்றதால் தப்பினர்

நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இன்று திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தின் வடபகுதியில் நூற்றாண்டு பெருமைமிக்க சில கட்டிடங்கள் உள்ளன. இதில் ஒரு கட்டிடத்தில் பல ஆண்டுகளாக கோர்ட் இயங்கி வந்தது. அதன் பின்னர் 1997ம் ஆண்டு முதல் அங்கு கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பாளையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, கமிஷனர் அலுவலகம் இடம் பெயர்ந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் பழைய கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் தற்போது கனிமவளத்துறை, ரயில்வே நில எடுப்பு அலுவலகம், மாடியில் மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மகளிர் திட்ட அலுவலகம் அருகே மொட்டை மாடி பகுதியில் கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலையில் மகளிர் திட்ட அலுவலகத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதற்கு கீழ்ப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இடிந்து விழுந்த கட்டிட கழிவுகள் அனைத்தும் ரயில்வே நில எடுப்பு அலுவலகம் அருகே குவியலாக காட்சியளிக்கின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததால் மகளிர் திட்ட அலுவலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து மாடிப்படி வழியாக அலறியடித்து இறங்கி ஓடி வந்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் சிரஸ்தார் ஆகியோர் நேரில் வந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கலெக்டர் அலுவலக போலீசாரும் அங்கு சென்று கீழ்ப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களை வேறிடத்தில் பணிபுரியுமாறு அறிவுறுத்தினர்.

இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘‘மகளிர் திட்ட அலுவலகத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறோம். இப்போது இடிந்து விழுந்த பகுதியை தாண்டியே நாங்கள் கழிவறைக்கு செல்ல வேண்டியிருந்தது. மதிய உணவு  இடைவேளையில் இடிந்து விழுந்த பகுதியில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

இன்று காலை அலுவலகத்திற்கு வந்தவுடன் ஊழியர்கள் அனைவருக்கும் வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடந்ததால் நாங்கள் யாரும் அங்கு செல்லவில்லை. இதனால் நாங்கள் உயிர் தப்பினோம்.’’ என்றனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் இதுபோன்று பராமரிப்பின்றி ஏராளமான கட்டிடங்கள் உள்ளதால், அவைகளின் உறுதித் தன்மையை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: