கலவரத்தில் பலியானால் ரூ.5 லட்சம் இழப்பீடு; பாலியல் குற்றவாளிகளுக்கு இனிமேல் முன்ஜாமின் கிடையாது: உத்தரபிரதேசத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்றம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இனிமேல் பாலியல் குற்ற வழக்கில் கைதானவர்களுக்கு முன்ஜாமின் கிடைக்காது. கலவரத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் அதுதொடர்பான கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம்.

சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் கூட பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் உத்தரபிரதேச சட்டப் பேரவையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில சட்டமன்ற விவகாரங்கள் அமைச்சர் சுரேஷ் கன்னா கூறுகையில், ‘பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இனிமேல் முன்ஜாமீன் கிடைக்காது. குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவின்படி குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 1973-இன் பிரிவு 438ல் திருத்தம் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. போக்சோ சட்டம் போன்றவை இருந்தாலும் கூட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டாலும் கூட, இச்சட்டத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். சாட்சியங்களை அழிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை தாக்குவது, அவர்களை அச்சுறுத்துவது போன்றவற்றை இந்த சட்டத் திருத்தம் மூலம் தடுக்க முடியும். பொதுச் சொத்துக்களை அழிப்பவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிப்பது தொடர்பான திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: