மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை: சென்ன கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மூத்த பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் நல்லுறவு நீடித்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கான மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்ட அவர், மனிதவள மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் முன்னிலை வகிப்பதாக கூறினார்.

மக்கள் தொடர்பான பிரச்னை என்றால் தானே முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவேன் என்றும் தெரிவித்தார். மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர் முதலமைச்சர் என்றும் புகழாரம் சூட்டினார். அவரையும், அமைச்சர்களையும் நல்ல நண்பர்களாக கருதுவதாகவும், அவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடமில்லை, அதுவே இறுதிக் கருத்தாக இருந்தால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது கடினம் என்றும் தெரிவித்தார். மசோதா மீதான சட்ட நிபுணர்களின் இறுதிக் கருத்துக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சனாதான தர்மத்தை ஆதரித்துப் பேசுவதன் மூலம் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக குற்றம்சாட்டப்படுவதை அவர் மறுத்தார்.

அரசியலமைப்புக்கு உட்பட்டே தனது கருத்துகளை கூறி வருவதாகவும், தனது அனுபவத்தில் பல்வேறு அமைப்புகளை கண்டிருந்தாலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆபத்தானது என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: