ஓட்டேரியில் பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்களுக்கு துணை கமிஷனர் நூதன தண்டனை 12 அதிகாரங்களில் வரும் திருக்குறளை பொருளுடன் ஒப்புவிக்க வேண்டும்

சென்னை: ஓட்டேரியில் பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்கள் திறக்குறள்களை படித்து, பொருள் விளக்கத்துடன் ஒப்புவிக்க வேண்டும் என துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஓட்டேரி குயப்பேட்டை படவட்டம்மன் கோயில் தெருவில் சென்னை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நேற்று பள்ளிக்கு கத்தியுடன் வந்திருப்பதாக தலைமை ஆசிரியர் சாந்திக்கு சக மாணவர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர். உடனே, தலைமை ஆசிரியர் சாந்தி குறிப்பிட்ட அந்த 2 மாணவர்களின் பைகளை சோதனை செய்தார். அதில், ஒரு பள்ளி மாணவனின் பையில் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி தலைமை ஆசிரியர் சாந்தி, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவர்களின் பெற்றோர்களை, காவல் நிலையத்துக்கு வரவழைத்தார். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா மாணவர்கள் இருவருக்கும் 15 வயது  என்பதால் இந்த வழக்கை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் கொண்டு சென்றார். இதுகுறித்து, அவர் மாணவர்களிடம் விசாரணை செய்தார். அதில், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே சிறு சிறு பிரச்னைகளுக்காக அடிக்கடி சண்டை நடந்து வந்தது தெரியவந்தது.

எனவே, பாதுகாப்பிற்காக மாணவர்கள் கத்தியை பையில் போட்டு மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், 2 மாணவர்களிடமும் திருக்குறளில் உள்ள குறிப்பிட்ட 12 அதிகாரங்களில் வரும் அனைத்து திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருளை படித்து வரும் 27ம்தேதி கூற வேண்டும். அவ்வாறு கூறவில்லை என்றால் கூடுதலாக 12 அதிகாரங்கள் தரப்படும் என துணை கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்கள் இருவரும் குறிப்பிட்ட நாளில் துணை கமிஷனரிடம் கூறுவதற்காக திருக்குறளில் குறிப்பிட்ட 12 அதிகாரங்களையும் படித்து வருவதாக உறுதி அளித்தனர்.

Related Stories: