மாணவிகள் மீது சிகரெட் புகை விட்ட புகாரில் விசாரணை பிளஸ்1 மாணவனை தாக்கியதாக 2 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்: மேலும் 2 பேர் டிரான்ஸ்பர்; சிஇஓ உத்தரவு; ஆரணி அருகே அரசு பள்ளியில் பரபரப்பு

ஆரணி: ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகை விட்ட புகாரில் விசாரணை நடத்திய ஆசிரியர்கள் பிளஸ்1 மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும், 2 பேரை டிரான்ஸ்பர் செய்தும் சிஇஓ அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 783 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியை, ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பள்ளி முடித்து வீட்டிற்கு சென்ற சில மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மாணவி ஒருவர் இது பற்றி ஆசிரியர்களிடம் புகார் செய்தார். இதனால் சம்பந்தப்பட்ட மாணவரை பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்யானந்தம், பாண்டியன் ஆகியோர் மதிய உணவு நேரத்தில் ஒரு அறைக்கு அழைத்து சென்று மாணவியின் முகத்தில் சிகரெட் புகை விட்டதற்கு கண்டித்துள்ளனர்.

இதனால், மாணவனுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரம்பு மீறிய அந்த மாணவனை ஆசிரியர்கள் கடுமையாக கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த மாணவருக்கு உள் காயம் ஏற்பட்டதாக பெற்றோரிடம் மாணவர் தெரிவித்துள்ளார். உடனே, அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதுதவிர, புகை பிடித்த மாணவரின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் நேற்று அந்தப் பள்ளிக்கு சென்று பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories: