பயணிகள் பீதி கோட்டை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து

சென்னை: கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ரயிலில் வீட்டிற்கு திரும்பிய நபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டியுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவின் மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று துரைப்பாக்கம், எழில்நகர் பகுதியை சேர்ந்த ரவீஸ்வரன் (55) என்பவர் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். அப்போது ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் நின்றவுடன் 4 பேர் ரயிலில் ஏறி ரவீஸ்வரனின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

மேலும் உருட்டுக் கட்டையால் தலையில் அடித்துள்ளனர். இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பியோடிய குற்றவாளிகள் 4 பேரை தேடிவருகின்றனர். இச்சம்பவத்தால் கோட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: