ஆந்திராவுக்கு கடத்த இருந்த 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எம்கேபி நகர் உதவி கமிஷனர் வரதராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வியாசர்பாடி புது நகர் 2வது மெயின் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சோதனை செய்தனர். அதில் 1300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வியாசர்பாடி எம்கேபி நகர் புதுநகர் பகுதியை சேர்ந்த ரஸ்தும் அலிக்கான் (33) என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சையது சாதிக் (40), எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த தவுலத் நிஷா (44) ஆகியோர் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி அதனை ஆந்திராவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரஸ்தும் அலிக்கான் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான தவுலத் நிஷா, சையத் சாதிக் ஆகியோரை தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 5 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ஆந்திராவுக்கு கடத்த இருந்த 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: