50 நாட்களாக முழு கொள்ளளவில் ஆழியார், பரம்பிக்குளம் அணை-விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளில் நீர்மட்டம்  50 நாட்களையும் தாண்டி முழு அடியை தொட்டவாறு உள்ளதால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த பிஏபி  திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிகுளம் அணைகளில் தேக்கி வைக்கப்படும்  தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் அவ்வப்போது  திறக்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு பிறகு போதிய  மழையில்லாததால், ஒருசில ஆண்டுகள் வறட்சியை நோக்கி சென்றது. பின் 2020ம்  ஆண்டிலிருந்து கோடை மழைக்கு பிறகு பருவமழையும் அடுத்தடுத்து பெய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆழியார் மற்றும் பரம்பிக்குளம்  உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததுடன் அதன் நீர்மட்டம்  சரிந்தது. கடந்த மே மாதத்தில் 120 அடிகொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம்  65 அடியாகவும், 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 23 அடியாக என  மிகவும் குறைந்திருந்தது. இதனால் வரும் காலங்களில் தண்ணீர் இன்றிபோய்விடுமோ?  என்ற கவலை விவசாயிகளிடம் இருந்தது.

இந்நிலையில் கடந்த மே  மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து  தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. மழைபெய்ய துவங்கிய சில நாட்களில்  இருந்து,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து அணைகளுக்கு தண்ணீர்  வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த பருவமழை தொடர்ந்து 2 மாதமாக  நீடித்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்து  நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

இதன் காரணமாக ஜூலை மாதம்  இறுதியில் பரம்பிக்குளம் அணையும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் ஆழியார்  அணையும் அடுத்தடுத்து நிரம்பியது. வெகு நாட்களுக்கு பிறகு, கடந்த 2  வாரமாக மழைக்குறைந்து தண்ணீர் வரத்து சற்று குறைய துவங்கியுள்ளது. இருப்பினும் ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம்  50 நாட்களுக்கு மேலாக முழு அடியையும் தொட்டவாறு இருப்பதால் இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, ஆழியார்  அணைக்கு வினாடிக்கு 310 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதே அளவு  தண்ணீர் பழைய ஆயக்கட்டுபாசன பகுதிக்கும் குடிநீர் தேவைக்கும்  திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 119.10 அடியாக உள்ளது.

அதுபோல், பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் வரத்து  இருந்தது. இருப்பினும், வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் தூணக்கடவு அணைக்கு  திறப்பு தொடர்ந்துள்ளது. பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அவ்வப்போது  தொடர்ந்திருப்பதால், இன்னும் சில வாரங்களுக்கு  அணைகளின் நீர்மட்டம் முழு  அடியையும் எட்டியவாறு இருக்கும் என்றும், அடுத்து வடகிழக்கு பருவமழை  வலுக்கும்போது அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு அடியையும்  எட்டியிருக்கும் என  பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories: