முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஈரோடு: முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இவர் ஒன்றிய அமைச்சராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும், கலைஞர் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 250 தபால் ஓட்டுக்களில் தோல்வியுற்றார். இந்நிலையில், அவர் அரசியலில் இருந்து விலக உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இது தொடர்பாக நேற்று காலை ஈரோட்டில் சுப்புலட்சுமிஜெகதீசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: 2009ம் ஆண்டு எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்ற பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை திமுக தலைவராக இருந்த கலைஞரிடம் தெரிவித்துவிட்டேன். கலைஞர் மறைவுக்குப்பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன். 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த நிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட்  29ம் தேதி பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்ட் 29ம்தேதியே தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன். நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன் என்றார்.

Related Stories: