பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 நீர்நிலைகளில் 4,775 மெட்ரிக் டன் வண்டல், ஆகாயத்தாமரை அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள ஆறுகள், ஏரிகள், நீர்வழிக் கால்வாய்கள்  உட்பட  23  நீர்நிலைகளில் 4,775 மெட்ரிக் டன் வண்டல்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 34  நீர்வழித் தடங்கள்  உள்ளன. குறிப்பாக அடையாறு ஆறு, கூவம் ஆறு,  பக்கிங்காம் கால்வாய் ஆகியவை முக்கிய நீர் வழித்தடங்களக உள்ளன. ஆண்டுதோறும் மழைக் காலங்களில் சென்னையில் தேங்கும் தண்ணீர், வடிகால்கள் வழியே சென்று இந்த நீர்வழி கால்வாய்களின் மூலம் கடலில் கலக்கிறது. தற்போது, சென்னையில் உள்ள பல நீர்வழித் தடங்களில்  வண்டல்களுடன், ஆகாயதாமரை படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைபடும் நிலை உள்ளது.

விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள வண்டல்களை அகற்றி தூர்வார முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  ஆலோசனையின்பேரில் தற்போது  சென்னை மாநகராட்சி சார்பில் நீர் வழித்தடங்களில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன.  இந்த பணிகளை மேற்கொள்ள நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய ரொபாடிக் எக்ஸ்கவேட்டர், ஆம்பிபியன்  போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னையில் உள்ள ஆறுகள்,  ஏரிகள் மற்றும் நீர்வழிக் கால்வாய்கள் உள்ளிட்ட 23  நீர்நிலைகளில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் 4,775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள்  அகற்றப்பட்டுள்ளன. கால்வாய்கள் குறுக்கே பல இடங்களில் பாலங்கள்   உள்ளன.  குறிப்பாக  மாம்பலம் கால்வாய் செல்லும் தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலை, விஜயராகவா  சாலை, சர்.பிட்டி தியாகராய சாலை, வெங்கட் நாராயணா சாலை, மூப்பாரப்பன்  தெரு, சி.ஐ.டி. நகர் 4வது பிரதான சாலை, தெற்கு உஸ்மான் சாலை, சி.ஐ.டி.நகர்  வடக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள குறுக்கு பாலங்களின்  கீழ்ப்பகுதிகளில்  நவீன இயந்திரங்களை கொண்டு வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளன.  

மாம்பலம்  கால்வா யில் இதுவரை 750 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் கழிவுகள் தூர்வாரி  அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாயதாமரையை அகற்ற சென்னை மாநகராட்சியில் 3 வகையான பிரத்யேக இயந்திரங்கள் என மொத்தம் 9 இயந்திரங்கள் உள்ளன. தூர்வாரும் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்கும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

* சுத்திகரிப்பு நிலையம்

கோட்டூர்புரம் அருகே, 4.32 கோடி ரூபாயில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ‘மாடுலர்’ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மாம்பலம் நீரோடையில் கலக்கும் கழிவு நீரை தடுக்க, சைதாப்பேட்டை, தாண்டன் நகரில், 14.21 கோடி ரூபாயில், 4 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. நெசப்பாக்கத்தில், 47.24 கோடி ரூபாயில், 10 எம்.எல்.டி., திறன் கொண்ட, மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு உள்ளது.இங்கு சுத்திகரிக்கும் நீரை, போரூர் ஏரியில் விடும் வகையில், 12 கி.மீ., நீளத்தில் குழாய் பதித்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

* கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

அடையாறு ஆறு மற்றும் கூவம் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க 402 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 123.10 கோடி ரூபாயில் அடையாறு ஆற்றில் கலக்கும் கழிவு நீரை இடைமறித்து மாற்று வழிகளில் திருப்பி, அருகில் உள்ள கழிவு நீர் வெளியேற்று நிலையம் கொண்டு செல்லும் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது. இதற்காக, இயந்திர நுழைவாயில் அமைத்தல், குழாய் பதித்தல், விசைக்குழாய் அமைத்தல், கழிவு நீரிறைக்கும் நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்ற கட்டமைப்பு அடையாறு, கோட்டூர்புரம் பகுதியில், ஆற்றின் வலது கரை பகுதியில், 16.16 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

* முக்கிய கால்வாய்களின் குறுக்கே அமைந்துள்ள பாலங்களின் கீழ்ப்பகுதிகளில் நவீன இயந்திரங்களை கொண்டு வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளன.

Related Stories: