முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு திருச்சியில் ரூ.1.29 கோடியில் ஒருங்கிணைந்த சமையல் அறை: சமைத்த உணவுகளை பாதுகாக்க அரங்கு

திருச்சி: திருச்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக ₹1.29 கோடியில் ஒருங்கிணைந்த சமையல் அறை திருச்சி சையது முர்துஷா பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சமைத்த உணவுகளை பாதுகாக்க அரங்கும், மேலும் கண்காணிப்பதற்காக வளாகம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரால் அரசு தொடக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அமைச்சர்களால் இந்த திட்டம் நேற்றுமுன்தினம் துவங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 2,928 ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்காக திருச்சி சையது முர்துஷா பள்ளியில் 1600 சதுர அடி பரப்பளவில் ஒரு ஒருங்கிணைந்த சமையலறையும், 2400 சதுர அடி பரப்பளவில் சமைத்த உணவு பண்டங்களை பாதுகாக்கவும் ஒரு அரங்கு கட்டப்பட்டுள்ளது. சமைப்பதற்கு என்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நீராவி மூலம் உணவு சமைப்பதற்கான வசதி, அதோடு 6 அடுப்புகள் மற்றும் பண்ட பாத்திரங்கள் என்று ₹ 1.29 கோடி மதிப்பில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமையலறையில் சமைக்கப்பட்டு காலை 7.45 மணிக்குள் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சேர்க்கவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான முன்னோட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த சமையலறையில் காலை 4 மணியளவில் சமைக்க துவங்கி 6.30 மணியளவில் இந்த இடத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் உணவு கொண்டு செல்வதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு திங்கள் ரவா உப்புமா மற்றும் சாம்பார், செவ்வாய் சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வௌ்ளிக்கிழமை ரவா கேசரி மற்றும் சேமியா காய்கறி கிச்சடி தயாரித்து அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உணவுகளை தயாரித்து அனுப்ப ‘‘நோ புட் வேஸ்ட்” என்ற தனியார் தொண்டு நிறுவனம் இந்த காலை உணவை தயாரிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டிடங்கள் முழுவதும் கேமராக்கள் ெபாருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த கண்காணிப்பு பணியையும் இந்த தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் என்றும், உணவு பொருட்கள் பாதுகாக்கு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 41 துவக்கப்பள்ளிகளில் 2,705 மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் உள்ள 41 பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளில் ஏற்கனவே மதிய உணவு தயாரிக்கும் அறைகளிலேயே காலை உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தனியாக அடுப்பு, பாத்திரங்கள் அனைத்தும் வாங்கி தரப்பட்டுள்ளன. இந்த ஒன்றியத்தில் பள்ளிகளில் இருந்த 7 சமையலறை கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய சமையலறைகள் கட்டப்பட்டுள்ளன.

Related Stories: