சதம் விளாசினார் ரஜத் பத்திதார் நியூசி. ஏ அணிக்கு 416 ரன் இலக்கு

பெங்களூரு: இந்தியா ஏ அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் (4 நாள், அதிகாரப்பூர்வமற்றது), நியூசிலாந்து ஏ அணிக்கு 416 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 293 ரன் குவித்த நிலையில் (ருதுராஜ் 108, உபேந்திரா 76), நியூசிலாந்து ஏ அணி 237 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மார்க் சாப்மேன் 92, ஷான் சோலியா 54 ரன் விளாசினர். இந்தியா ஏ பந்துவீச்சில் சவுரவ் குமார் 4, ராகுல் சஹார் 3, முகேஷ் 2, ஷர்துல் தாகூர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

56 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பிரியங்க் பாஞ்சால் 62 ரன், ருதுராஜ் கெயிக்வாட் 94 ரன், சர்பராஸ் கான் 63 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடி சதம் அடித்த ரஜத் பத்திதார் 109 ரன், ராகுல் சஹார் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. ஏ பந்துவீச்சில் ரச்சின் ரவிந்திரா 3, ஜோ வாக்கர் 2, சோலியா, புரூஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 416 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்துள்ளது. ரச்சின் 12 ரன் எடுத்து சவுரவ் பந்துவீச்சில் வெளியேறினார். ஜோ கார்ட்டர் (6), ஜோ வாக்கர் (0) களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: