பூந்தமல்லி அருகே போலீஸ் என கூறி மருத்துவ கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் நகை பறிப்பு: ஆசாமிக்கு வலை

பூந்தமல்லி: திருமுல்லைவாயல், முல்லை நகரை சேர்ந்தவர் கிருஸ்டல் டார்லியா (23). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, பயிற்சி எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் மகன் ஜிஜோ (21), என்பவருடன் கல்லூரியில் இருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே சென்றபோது, காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், தன்னை போலீஸ் என்று கூறியதுடன், இங்கு எதற்கு நிற்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். பின்னர், ஜிஜோவை விசாரிக்க வேண்டும் என்று கூறி சிறிது தூரம் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். ஒரு இடத்தில் அவரை நிற்க வைத்துவிட்டு மீண்டும் அந்த மாணவியிடம் வந்த அந்த ஆசாமி, ‘‘உன்னிடம் விசாரிக்க எஸ்.ஐ வருகிறார். அதுவரை காத்திரு, என கூறியுள்ளார்.  மேலும், அந்த எஸ்.ஐ மோசமானவர். உன்னிடம் நகை, பணம் இருந்தால் பறித்துக்கொள்வார். எனவே, நீ அணிந்துள்ள நகைகளை கழற்றி பத்திரமாக பையில் வைத்துக்கொள், என கூறியுள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த மாணவி, தான் அணிந்திருந்த வளையல், கம்மல், மோதிரம், செயின் என 4 சவரன் நகையை கழற்றி பொட்டலமாக சுற்றி காரில் வைத்துள்ளர். அப்போது, அந்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்த அந்த நபர், அந்த 4 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பினார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் அந்த மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் என கூறி நகையை பறித்து சென்ற நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: