நடை பயணத்துக்கு ஒருநாள் ஓய்வு காங், தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை: கோவா எம்எல்ஏ.க்கள் மீது அதிருப்தி

திருவனந்தபுரம்: தனது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நேற்று ஓய்வு எடுத்த ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொணடார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி பாரத் ஜோடா யாத்திரை  என்ற பெயரில் ஒற்றுமை நடை பயணத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தற்போது அவர் கேரளாவில் நடை பயணம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கேரளாவில் 4வது  நாள் நடை பயணத்தை மேற்கொண்ட அவர், கொல்லம் மாவட்டம் பள்ளிமுக்கு பகுதியில் முடித்தார். முன்னதாக, சாத்தனூரில் ஓய்வு எடுத்தபோது பள்ளி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். நேற்று அவர் நடை பயணம் போகாமல் ஓய்வு எடுத்தார். இந்நிலையில், கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  பாஜ.வுக்கு தாவி உள்ளனர். இது தொடர்பாக நேற்று காலை, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். இதில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் துரோகம் குறித்து அவர் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

* 50 நிமிடங்களில் 6.5 கிலோ மீட்டர்

நடை பயணத்தில் ராகுல் காந்தி நடக்கும் வேகத்தை பார்த்து கேரள காங்கிரஸ் தலைவர்கள் உள்பட அனைவரும் திகைத்துப் போய் உள்ளனர். இதனால், சற்று மெதுவாக நடக்கும்படி அவரிடம் தலைவர்கள் அடிக்கடி அறிவுறுத்தி  வருகின்றனர். நேற்று முன்தினம் நாவாயிக்குளம் முதல் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியில் உள்ள ஸ்ரீராமபுரம் வரை உள்ள 6.5 கி.மீ.  தூரத்தை அவர் 50 நிமிடங்களில் கடந்தார். அவருடைய நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல், காங்கிரஸ் தலைவர்கள் ஓடுகின்றனர்.

Related Stories: