கங்கைகொண்டான் - சீவலப்பேரி சாலையில் புடைப்பு சிற்பங்களுடன் குடவறை கோயில்: தொல்லியல் துறை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

நெல்லை: கங்கைகொண்டானில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் புடைப்பு சிற்பங்களுடன் கூடிய குடவறைக்கோயிலை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒருங்கிணைந்த நெல் லை மாவட்டம் பல ஆதிகால வரலாற்றுக்கு சான்றாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திமுக அரசு பல்வேறு அகழாய்வு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதன் முத்தாய்ப்பாக பொருநை அருங்காட்சியகம் ரூ.33 கோடியில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாளையில் பாழடைந்து கிடந்த மேடை போலீஸ் ஸ்டேஷன் கல்கோட்டையும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சான்றுகளின் வரிசையில் ஆதிகால வரலாற்றின் தடயங்களில் ஒன்றாக கங்கைகொண்டானில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் ராமச்சந்திராபுரத்தில் ஆண்டிச்சிப்பாறை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பெரிய பாறைகளில் பல்லவர்கள் மற்றும் முற்கால பாண்டியர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறிய அளவிலான குடவறைக்கோயில் உள்ளது.

கருவறை மட்டும் உள்ள இங்கு உள்பகுதியில் ஜேஷ்டாதேவி மற்றும் விநாயகர் புடைப்பு சிற்பங்கள் உள்ளன.பாறையின் மற்றொரு பகுதியில் குடவறைப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேல்பகுதிக்கு செல்ல படிகட்டுகள் அமைக்க முயன்றதற்கான அடையாளங்களும் உள்ளன. வரலாறுகள் புதைந்துள்ள இந்த குடவறைக்கோயில் கண்டுகொள்ளப்படாமல் இருந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலிலும் இங்கு மர்ம நபர்கள் முகாமிடுவது தொடர்ந்துள்ளது. அப்பகுதியில் மதுபாட்டில்கள் போன்றவை கிடந்துள்ளது.

இந்த குடவறைக்கோயில் குறித்து தற்போது தெரியவந்ததும் சமீப நாட்களாக இக்கோயிலை பார்வையிட பலர் வருகின்றனர். அப்பகுதியில் கிடந்த மதுபாட்டில்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. ஆயினும் பாறைகளின் மேல்பகுதியிலும் அருகிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. இக்கோயிலை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் பொதுமக்களை சுற்றுலா அழைத்து சென்று இதன் வரலாற்றை விளக்கியுள்ளனர். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி இக்கோயிலை ஆய்வு செய்து இதை பராமரிப்பதற்கான வழிமுறைகள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் வசம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொல்லியல் துறையினர் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இக்கோயிலை மேலும் செம்மைப்படுத்தி சுற்றுலாதலமாக மாற்றவேண்டும். இங்கு முள்செடிகள் உள்ளிட்டவைகளை அகற்றி வேலிகள் அமைத்து விஷமிகள் நுழையமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: