காணிப்பாக்கத்தில் 13ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் விமான உற்சவத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகர்

*திரளான பக்தர்கள் தரிசனம்

*இன்று சூரிய பிரபை வாகனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 13ம் நாளான நேற்று விமான உற்சவத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார்.

சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்புவாக தோன்றி காட்சியளித்து வருகிறார். சக்தி வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாகவே பிரமோற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். ஆனால், காணிப்பாக்கத்தில் மட்டும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். அதன்படி பிரமோற்சவத்தின் 12ம் நாளான நேற்று முன்தினம் மாலை யாழி வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு நான்கு மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் 13ம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை விமான உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்த விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விமான உற்சவ வாகனத்தில் 4 மாட வீதியில் வலம் வந்த விநாயகரை திரளான பக்தர்கள் ஆரத்தி எடுத்து  தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவத்தின் 14 ஆம்  நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும். அதனை அடுத்து சூரிய பிரபை வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

காணிப்பாக்கம் பெயர் காரணம்

தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 3 சகோதரர்கள் இருந்தனர். இதில் ஒருவருக்கு கண் பார்வை கிடையாது, ஒருவருக்கு வாய் பேச முடியாது. மேலும் ஒருவருக்கு காது கேட்காது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து விவசாய நிலத்தில் கிணறு தோண்டியுள்ளனர். அப்போது கிணற்றில் இருந்து தண்ணீர் ரத்தம் போல் வந்துள்ளது. அதில் அவர்கள் முகம் கழுவியபோது குறைபாடுகள் நீங்கி குணம் பெற்றனர். இதனால் ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் தெரிவித்து அனைவரும் வந்து பார்த்தபோது கிணற்றில் இருந்து சுயம்புவாக விநாயகர் தோன்றியுள்ளார். தெலுங்கில் காணி என்றால் நிலம், பாக்கம் என்றார் தண்ணீர் என்பது அர்த்தம். இதனால் அந்த ஊர் காணிப்பாக்கம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

Related Stories: