புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும்: தெலங்கானா சட்டப்பேரவையி்ல் தீர்மானம்

திருமலை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயர் சூட்ட வேண்டும் என்று தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து மாநில தொழில், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கே.டி. ராமராவ் பேசுகையில், ‘‘சமூக நீதி, ஜனநாயகத்தின் மகத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக அம்பேத்கர் இருக்கிறார். தெலுங்கானா தனி மாநிலத்தை அடைய அம்பேத்கரின் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும்,’ என தெரிவித்தார்.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ‘புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்டுவதை விட சிறந்த நபர் வேறு யாருமில்லை,’ என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார். இதைத் தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யும்படியும் தெலங்கானா சட்டப்பேரவை, மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

* பாஜ எம்எல்ஏ சஸ்பெண்ட்

தெலுங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ் குறித்து பாஜ எம்எல்ஏ எட்டாலா ராஜேந்தர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்காக, மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளும் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து, இந்த தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: