பள்ளி, கல்லூரி என்சிசி., மாணவர்களுக்கான கூட்டு பயிற்சி முகாம் குன்னூரில் துவக்கம்

ஊட்டி : நீலகிரி மாவட்ட 31வது என்சிசி., அமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி என்சிசி., மாணவ, மாணவிகளுக்கான கூட்டு பயிற்சி முகாம் குன்னூர் அருகேயுள்ள பாய்ஸ் கம்பெனி அவாஹில் ராணுவ பயிற்சி மையத்தில் துவங்கியுள்ளது.கர்னல் சீனிவாசன் தலைமையில் நேற்று முன்தினம் துவங்கிய இப்பயிற்சி முகாம் வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.

 இதில் ஊட்டி, கூடலூர் அரசு கல்லூரிகள், ஊட்டி சிஎஸ்ஐ., பொறியியல் கல்லூரி மற்றும் நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர், தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளிகள், ஊட்டி சிஎஸ்ஐ., சிஎம்எம்., பள்ளி, ஜோசப் பள்ளி, சாம்ராஜ் பள்ளி, குன்னூர் புனித அந்தோனியார் பள்ளி, ஏகலைவா பழங்குடியினர் பள்ளி, என்எஸ்.,ஐய்யா, கூடலூர் மார்னிங் ஸ்டார், அய்யன்கொல்லி புனித தாமஸ் பள்ளி மற்றும் மேட்டுபாளையம் எஸ்விஜிவி., ஆகிய 12 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்சிசி., மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுஉள்ளனர். இதில் என்சிசி., மாணவர்களுக்கு துப்பாக்கிகளை கையாளுதல், ராணுவ நடைபயிற்சி, வரைபடங்கள் மூலம் இடங்களை கண்டறிதல், யோகா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்ட உள்ளன.

இதுதவிர தீ விபத்துகளை எவ்வாறு கையாள்வது, விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, பேரிடர் சமயங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடும் முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் என்சிசி., அலுவலர்கள் சசிக்குமார், விஜய், டோம்னிக், சுப்பிரமணியன், நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முடிவில் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: