இறுதிச்சடங்கு 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எலிசபெத்துக்கு இரங்கல்: புதிய மன்னர் 3ம் சார்லஸ் பங்கேற்பு

* பாரம்பரிய சடங்குகள் தொடங்கியது

லண்டன்: இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்குகள் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பங்கேற்றதுடன், பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) கடந்த 8ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை தொடர்ந்து, இளவரசராக இருந்த மூன்றாம் சார்லஸ் மன்னரானார். எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ராணியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான எடின்பர்க்கில் உள்ள ‘ஹோலிரூட்ஹவுஸ்’ மாளிகையில் வைக்கப்படும். முன்னதாக நேற்று ராணியின் உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. வேல்ஸ் இளவரசரும், இளவரசியுமான வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதி, இளவரசர் ஹாரி - மேகன் மார்கெல் ஆகியோரும் விண்ட்சர் அரண்மனைக்கு வருகை தந்து மரியாதை செய்தனர். அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பிறகு, இங்கிலாந்து மக்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் 4 நாட்கள் வைக்கப்படும்.

தொடர்ந்து வரும் 19ம் தேதி நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்தின் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதன்முறையாக மன்னர் சார்லஸ் (3) மற்றும் ராணி கமீலா ஆகியோர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு வருகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதியதாக பதவியேற்ற மன்னர் சார்லஸ் (3) வாழ்த்து தெரிவிப்பதுடன், ராணி எலிசபெத்துக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பின் சார்லஸும், கமீலாவும் எடின்பர்க்கிற்கு சென்று அங்கு நடக்கும் பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

அதன்பின் ராணியின் உடல் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையிலிருந்து அருகிலுள்ள செயின்ட் கில்ஸ் கதீட்ரலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். மாலையில் மன்னர் மற்றும் மன்னர் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ராணியின் நினைவாக கதீட்ரலில் நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். அதன்பின் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படும்.

காமன்வெல்த்தை கட்டிகாப்பது எப்படி?

மறைந்த இரண்டாம் எலிசபெத், ஆஸ்திரேலியாவில் இருந்து ஆன்டிகுவா நாடு வரையிலான 56 நாடுகளை கொண்ட காமன்வெல்த் நாடுகளை நேசிப்புடன் ஒன்றாக வைத்திருந்தார். ஆனால் தனது தாய் இரண்டாம் எலிசபெத் மறைந்தவுடன், சுதந்திர நாடுகளாக வலுப்பெற்று இருக்கும் காமன்வெல்த் நாடுகளை எவ்வாறு கட்டிக் காப்பது என்ற கவலை புதிய மன்னரான மூன்றாம் சார்லசுக்கு வந்துள்ளது. அவருக்கு இது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக பார்க்கப்படுவதால், காமன்வெல்த் நாடுகளின் பொதுச் செயலாளரான பாட்ரிசியா, பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள காமன்வெல்த் நாடுகளின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதிய மன்னரின் பதவியேற்பு குறித்தும் விளக்கினார்.

அதன் தொடர்ச்சியாகவே ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ‘சார்லஸ் கிங்’ என்று அதிகாரப்பூர்வமாக பிரகடனத்தை வெளியிட்டன. ஆனால் கரீபியன் தீவு நாடான பார்படாஸ் போன்ற நாடுகள் தங்களை குடியரசு நாடுகளாக சமீபத்தில் அறிவித்துக் கொண்டதால், அவை அரச குடும்பத்துடன் ஒத்துபோகுமா? என்பதும் கேள்வியாக உள்ளது. மேலும் கனடாவின் ஒரு பிராந்தியம், ஜமைக்கா போன்ற நாடுகள் தங்களை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறிவருகின்றன. ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் சார்லஸ் மன்னராக கூடாது என்றும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன. அதனால், புதிய மன்னர் சார்லஸ், காமன்வெல்த் நாடுகளை எப்படி ஒருங்கிணைத்து கொண்டு செல்வார் என்பது புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: