வரிச் சலுகை, ஹவாலா பணத்தை பதுக்க தொடங்கப்பட்ட 2,174 போலி கட்சிகள் ரூ.1000 கோடி முறைகேடு: அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம் செக் வைக்கும் வருமான வரித்துறை

புதுடெல்லி: இந்தியாவில் எந்தவொரு குடிமகனும் சொந்தமாக அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது அவரது கட்சியிலிருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம். அவ்வாறு அறிவிக்கப்படும் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளை வைத்துள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னரே அந்த கட்சியை மாநில கட்சியா? அல்லது தேசிய கட்சியா? என்பதை அங்கீகரிக்க முடியும். தொடர்ந்து தங்களுக்கு என்று நிரந்தர தேர்தல் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியானது பெற முடியும்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதி வசூலிக்கின்றன. இந்த நன்கொடை வசூலை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கும் ஒரே விதிதான். பொதுமக்களிடம் நன்கொடைக்கு பெறும் அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டாம். நன்கொடைக்கு பதிலாக அரசியல் கட்சிகள் அளிக்கும் ரசீதை காட்டி நன்கொடை அளிப்பவருக்கும் வருமான வரி விலக்கு சலுகை பெறமுடியும். இதனால், தற்போது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,796 ஆக உயர்ந்து உள்ளது. 55 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் நோக்கமே ‘பணம்’ மட்டும்தான். பதிவு செய்யப்பட்ட பல கட்சிகளுக்கு அலுவலகமே இல்லை. சமீபத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் மீது வந்த புகாரின் அடிப்படையில் மும்பையின் சியோன் பகுதியில் உள்ள குடிசைப்பகுதிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று விசாரித்தனர். அப்போது, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி குடிசை முகவரியில் இருந்ததும், சுமார் ​ரூ.​100 கோடிக்கு வருமான வரி விலக்கு கோரியிருந்ததும் தெரியவந்தது. விசாரணையில், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஹவாலா கும்பலின் தூண்டுதலின் பேரில், பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதும், இந்த கட்சிகளை நடத்துபவர்களின் அனைத்து செலவுகளும் ஹவாலா கும்பலால் ஏற்கப்படுவதும் தெரியவந்தது.

இதேபோல் ,பல்வேறு மாநிலங்களில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. புகார்களின் அடிப்படையில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து 198 அமைப்புகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியது. தேர்தல் ஆணைய விதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் 2,174 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் அதிகளவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு சுமார் ரூ.1,000 கோடி நன்கொடை அளிக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 2,174 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடந்தன. ஹவாலா கும்பலால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தன.

* நன்கொடை பத்திரம்தான் காரணம்

அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வழங்கலாம் என்பதால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் தேர்தல் பத்திரங்களில் பலர் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குகின்றனர். இந்த நன்கொடை விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,208 கோடி நன்கொடை பத்திரங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் விற்கப்பட்டுள்ளன. இதில் ரூ.1987.55 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ளன.  

Related Stories: