தேசிய அளவில் புது கட்சி சந்திரசேகர ராவ் திட்டம்: தசரா தினத்தில் அறிவிப்பு?

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  புதிய தேசிய கட்சி துவங்க வேண்டும் என்று அவரது கட்சி பிரமுகர்கள் அவரை வலியுறுத்தி  வருகின்றனர். அக்டோபரில் வரும் தசரா தினத்தில் புதிய கட்சியை அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானாவில் முதல்வராக சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கும், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.  சந்திரசேகர ராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை எதிர்க்க, தேசியளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து  புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம் கட்சியின் பல்வேறு மாவட்ட தலைவர்கள்  அவரை சந்தித்து, தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தேசிய அளவிலான புதிய கட்சியை தொடங்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அக்டோபரில் வரும் தசரா தினத்தில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறப்படுகிறது. ஆனால், ‘புது கட்சி என்ற எண்ணம்தான் உள்ளது. ஆனால், அது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,’ என்று கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: