பால்பன் சாப்பிட பாலமேடு போலாமா...

திருநெல்வேலி என்றால் அல்வா, பழநி என்றால் பஞ்சாமிர்தம் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் சக்கை போடு போடுகிறது பால்பன்.

 சுடச்சுட வாழை இலையில் வைத்து, அதன் மேல் சீனிப்பாகு ஊற்றி சாப்பிட, தேவாமிர்தமாக இருக்கும். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், பரவலாக இருந்தாலும், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் இது மிகவும் பிரபலம். பெரிய ‘சைஸ்’ குலோப் ஜாமூன் போல இருக்கும், பால்பன், பெரும்பாலான டீக்கடைகளில் காலை 5 மணிக்கெல்லாம் சுடச்சுட கிடைக்கிறது. மிருதுவாக இருப்பதால், குழந்தைகள் முதல், பல்போன முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

பாலமேட்டை சேர்ந்த டீ கடைக்காரர்கள் கூறுகையில், ‘‘பசி தாங்கும் என்பதால் காலையில் வேலைக்கு செல்வோரின் உணவுப் பட்டியலில் பால்பனுக்கு முக்கிய இடமுண்டு. முன்பு, கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து பாகு தயாரிப்போம்; அது, நோயை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும், சுவை அதிகமாகவும் இருக்கும்.

இப்போது சீனிக்கு மக்கள் பழகிவிட்ட நிலையில், பழைய கலவையை, யாரும் விரும்புவதில்லை. பால்பன் சூடாக சாப்பிடுவதைவிட, சீனிப்பாலில் ஊற வைத்து ஒருநாள், இரண்டுநாள் கழித்து சாப்பிடுவதே அதிக சுவையாக இருக்கும். ஒட்டுமொத்த பால்பன்னும் சீனிப்பாலில் ஊறி, குளோப் ஜாமூன்போல் மாறிவிடுவதால், தித்திப்பு அதிகம் இருக்கும். எனவே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பால்பன்னில், மேலே உள்ளதைவிட, அடியில் சீனிப்பாலில் நன்கு ஊறிய பால்பன்னையே

அனைவரும் விரும்புவர்’’ என்கின்றனர்.

இத்தகைய சுவைமிகுந்த பால்பன் செய்முறை மிக எளிதுதான். ஒரு கிலோ மைதா மாவில், தண்ணீர் மற்றும் 100 மி.லி., தயிர் விட்டு, ஜெல்லி போன்ற பதத்திற்கு பிசைந்து, சிறிது சோடா உப்பு சேர்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நல்லெண்ணெய்யில் பொரித்தெடுத்து, அவற்றை சீனிப்பாகில் ஊற விட்டு எடுத்தால், பால்பன் தயார்! பாகில், ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்தால், வாசமாகவும், சுவையாகவும் இருக்கும். அப்புறம் என்ன? பாலமேடு, அலங்காநல்லூருக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வந்தால் சீனிப்பாகில் ஊறிய பால்பன்னை சுவைக்க மறக்காதீங்க!

Related Stories: