ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவுடன் திடீர் சந்திப்பு: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், சசிகலாவை தஞ்சையில் இன்று திடீரென்று சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நகர செயலாளர் அலுவலகத்தில்  இன்று காலை தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் காவாரப்பட்டு கிராமத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமணத்தை நடத்தி வைக்க தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். திருமண மண்டபம் அருகே வந்தபோது, மன்னார்குடியிலிருந்து ஒரத்தநாடு வழியாக தஞ்சைக்கு காரில் வந்த சசிகலாவை பார்த்ததும், வைத்திலிங்கம் காரை நிறுத்தி தனது ஆதரவாளர்களுடன் சசிகலாவை சந்தித்தார்.

அப்போது சசிகலா காரிலிருந்த இனிப்பை எடுத்து கொடுத்து வைத்திலிங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். சுமார் 7 நிமிடம் நடந்த இந்த சந்திப்புக்கு பின் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். வைத்திலிங்கம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த திருமண மண்டபம் முன் ஜெயலலிதா மற்றும் வைத்திலிங்கம் படங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரத்தநாட்டில் சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விரைவில் ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories: